பதிவு செய்த நாள்
09
செப்
2022
05:09
சூலூர்: சூலூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் மற்றும் மதுரை வீரன், மகா முனி, சங்கிலி கருப்பன், தன்னாசியப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புதிய திருமேனிகள் வடித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, முளைப்பாளிகை மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதல் கால ஹோமம் முடிந்து, தெய்வ திருவுருவ சிலைகளுக்கு, அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. காலை, 7:00 மணிக்கு, பெரிய மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.