பதிவு செய்த நாள்
10
செப்
2022
09:09
வில்லியனுார்: வில்லியனுாரில், பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் நேற்று நடந்தது. வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயமும், இக்கோவிலை சுற்றிலும் பிரசித்திப் பெற்ற 6 சிவாலயங்களும், 18 சித்தர்கள் ஜீவ சமாதிகளும் அமைந்துள்ளன. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து, கடந்த மார்ச் மாதம் முதன்முறையாக ஆன்மிக நடைபயணம் துவங்கியது.தொடர்ந்து, ஒவ்வொரு பவுர்ணமியன்றும் ஆன்மிக நடைபயணம் நடத்தப்பட்டு வருகிறது. 7வது மாதமாக, ஆன்மிக நடைபயணம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆனந்தபாஸ்கரனின் மகன் சங்கர் ஆன்மிக நடைபயணத்தை துவக்கி வைத்து பங்கேற்றார். வில்லியனுார் நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரர் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடத்தில் தரிசனம் செய்தனர்.வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதன் ஆலயத்தில் தரிசனம் முடித்துக்கொண்டு, சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் சங்கரா ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து, திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு, கோட்டைமேடு வழியாக ஆன்மீக நடைபயணம் மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது.