பதிவு செய்த நாள்
12
செப்
2022
05:09
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பண்ணமாகாளியம்மன் மற்றும் செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில், உப்பு பள்ளத்தில் உள்ள வண்ணமாகாளியம்மன் கோவில் மிகவும் சிதிலமடைந்து இருந்தது. விழா குழுவினர், புதிதாக கோவில், இரண்டு நிலை கோபுரம், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டி முடித்தனர். கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 10ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. புனித நீர் எடுத்து வந்து கோவிலை சுத்தம் செய்து, முதல் கால வேள்வி பூஜை துவக்கினர். 11ம் தேதி விமான கலசம் நிறுவி, இரண்டாம் கால வேள்வி பூஜையும், சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. மாலையில், மூன்றாம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, சுவாமி சிலைகளுக்கு எண் வகை மருந்து சாற்றப்பட்டது. இன்று காலை நான்காம் கால வேள்வி பூஜையை அடுத்து, மதுரை திருமங்கலம் காளீஸ்வரி தவசித்தேவர் முன்னிலையில், செல்வ கணபதி மற்றும் பண்ணமாகாளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும், சுவாமி சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். சிறுமுகை மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாக கால வேள்வி பூஜைகளை செய்தனர்.