பதிவு செய்த நாள்
15
செப்
2022
09:09
கேரளாவின் சபரிமலை போல் ஒவ்வொரு தமிழ் மாதமும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் நிலையில், அங்குள்ளதுபோல அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள மலைவாச சிவஸ்தலங்களில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலும் ஒன்று். பல்வேறு சித்தர்கள் வாழ்ந்து அடைக்கலமான மலை என்பதால் சித்தர் மலையாகவும், மூலிகையில் நிறைந்த மலையாகவும் விளங்குகிறது.மதுரை, விருதுநகர் மாவட்டத்தை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் 4 மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சதுரகிரியில், சுந்தர மகாலிங்கம், சந்தனமாகலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன. மலையடிவாரமான தாணிப்பறையில் இருந்து கோயில் வரை 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இக்கோயிலுக்கு தினசரி பக்தர்கள் சென்று வந்த நிலையில் 2015ல் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் நீர்வரத்து ஓடைகளை கடந்து செல்லவும், மலைப்பாதைகளில் நடந்து செல்லவும், மழை நேரங்களில் கோயிலுக்கு செல்வதிலும் சிரமத்தை சந்தித்துக் கொண்டே சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர். பல லட்சம் பக்தர்கள் வரும் சபரிமலையில் கேரளா அரசும், அங்குள்ள தேவசம் போடும் செய்துள்ள போக்குவரத்து, சுகாதாரம், தங்குமிடம், மருத்துவம், வசதிகள் போல் சதுரகிரியிலும் செய்து தர வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.தாணிப்பாறை அடிவாரத்தில் ஆக்கிரப்புகளை அகற்றி பஸ் ஸ்டாண்ட், தங்குமிடம், சுகாதார வளாகம் கட்டித் தரவும், வழியில் உள்ள ஓடைகளை கடந்து செல்ல பாலங்கள் அமைத்து தரவும், அபாயமான பகுதிகளில் படிகள், மின் விளக்குகள் வசதி செய்து தரவும், 500 மீட்டர் இடைவெளியில் பாதுகாப்பான மண்டபங்கள் அமைக்கவும், மலையில் தகவல் தொடர்பு வசதிக்கு அலைபேசி டவர்கள் அமைத்து தரவும், உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு மருத்துவமனை அமைக்கவும், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சதுரகிரிக்கு நேரடி பஸ் வசதி செய்து தரவும் வேண்டுமென சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.