பதிவு செய்த நாள்
25
செப்
2022
04:09
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி ஊஞ்சல் உற்வச விழா நடைபெறும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
இந்தாண்டு உற்சவம், தர்மசம்வர்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், துர்கை அலங்காரத்துடன் இன்று துவங்குகிறது. அக்., 5ம் தேதி வரை நடக்கிறது; 6ல் சாந்தாபிஷேகம் நடக்கவுள்ளது.இவ்விழாவில், காமாட்சி, மீனாட்சி, முகாம்பிகை, கம்பாநதி, மஹாலட்சுமி, கருமாரி, அன்னபூரணி, கமலாம்பிகை, சரஸ்வதி, மகிஷசுரமர்த்தினி சாமிகள் பல்வேறு வடிவில், மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். பக்தர்களுக்கான வசதி மற்றும் ஏற்பாடுகளை, பக்தர்கள், கிராம மக்கள் செய்துள்ளனர்.
அதேபோல், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சுவாமியின் திரிபுரசுந்தரி அம்மன், பக்தவத்சலேஸ்வரர் கோவிலில் வீற்று உள்ளார். இங்கு நவராத்திரி உற்சவம், இன்று துவங்குகிறது.அக்., 3ம் தேதி வரை, தினமும் மாலை, அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. தினமொரு சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.புரட்டாசி தசமி நட்சத்திர நாளான, அக்., 3ல், மூலவர் அம்பாளிற்கு முழு அபிஷேகம் நடைபெறும். இவருக்கு, ஆண்டில் ஆடி, பங்குனி மாத உத்திரம், புரட்டாசி தசமி ஆகிய நட்சத்திர நாட்களில் மட்டுமே, முழு அபிஷேகம் நடக்கும்.உற்சவத்தை முன்னிட்டு, ஆன்மிக தன்னார்வலர் நிகழ்வாக, இன்று காலை கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து, தினமும் லட்சார்ச்சனை, கலை நிகழ்ச்சி என நடத்தப்படுகிறது.ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி ஊஞ்சல் உற்சவ விழா, இன்று துவங்குகிறது.