பதிவு செய்த நாள்
25
செப்
2022
04:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற நவராத்திரி திருவிழா நாளை (செப். 26) காப்பு கட்டுடன் கோலாகலமாக துவங்குகிறது.
சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி, ஆனந்தவல்லி அம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, தை அமாவாசை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள ஒரே பெண் தெய்வமான ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அம்மன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கடைசி நாளில் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி, அம்பு எய்து அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி தற்போதும் நவராத்திரி திருவிழா நாளை (செப். 26) காலை 5:00 மணிக்கு காப்பு கட்டு வைபவத்துடன் விழா துவங்குகிறது. தினமும் இரவு 6:00 மணி முதல் 9:00 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஒன்பதாம் நாளான அக். 4 அன்று இரவு 7:00 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை வழிபாடு நடக்கிறது. பத்தாம் நாளான அக். 5 அன்று விஜயதசமியை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு மகிஷாஷ்வரவர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார். பின்னர் அம்பு எய்து அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்காக நாளை (செப். 26) முதல் அக்.5 வரை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதித்துள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன், அறநிலைத்துறையினர், ஏழூர் சாலியர் சமூகத்தினர் செய்துள்ளனர்.