பதிவு செய்த நாள்
30
செப்
2022
07:09
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, அன்னையை மகேஸ்வரி தேவியாக, வைஷ்ணவியாக அலங்கரித்து வழிபட வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோலத்தில் காட்சி தருவாள்.
அலங்காரம் காரணம்: அன்னை, மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். மஹதி என்று அழைப்பர். அம்பிகை சும்பன் என்ற அசுரனின் துாதன், சுக்ரீவன் வந்து சந்தித்து பேசுவதை, கேட்கும் கோலத்தில், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜிக்க வேண்டும்.அந்த நேரத்தில், அவளது தோற்றம் புன்னகை ததும்ப பட்டாபிஷேக கோலத்தில் காட்சி அளிப்பதாக இருக்கும். இத்தகைய வடிவத்தில், நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, அன்னையை அலங்கரித்து வழிபட நன்மை பயக்கும். பார்ப்பதற்கு அன்னை, இன்று மோகினி போல் காட்சியளிப்பாள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடைய மகாகாளி போன்றவள்; சர்வ மங்களம் தருபவள். அதனால் காளிக்குரிய பாரிஜாத மலரால் அன்னையை பூஜிப்பது சிறப்பு. தர்மத்தின் திருவுருவம் ஆனவளை, நீலாம்பரி ராகத்தில் பாடினால், காளி தேவி ரசித்து கேட்டு மகிழ்வாள் என்பது ஐதீகம்.
முக்கியத்துவம்: கடின உழைப்பாளிகள், உழவர்கள், அலுவலகங்களில் பணி செய்வோர், உழைப்பின் முழுப்பலனை பெற, அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
பெண்ணரசியான மீனாட்சி, மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பாதுகாத்து பார்த்து குஞ்சாக்குகிறதோ, அதுபோல தன் பக்தர்களை பாதுகாத்து அருள் பாலிக்கிறாள்.
ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், வீரத்துடன் வளர்க்கப்பட்ட மீனாட்சியை இன்று வழிபடுவது, பெண்களுக்கு சாலச்சிறந்தது.
மனித நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, சாதாரண தன் பக்தர்களும், தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே கொலு வைப்பது வழக்கம் என்பதை வலியுறுத்தும் இந்நாள்.
வழிபாட்டு முறை: நைவேத்தியம்: காலையில் பால் சாதம்-சுண்டக்காய்ச்சிய பசும்பாலில் குழைய வேக வைத்த சாதத்தை சேர்த்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்தால், தெய்வீக சுவையுடன் பிரசாதம் தயார் ஆகியிருக்கும். புளியோதரை, உளுந்தன்னம்-, இனிப்பு, மாதுளம் பழம் வைத்து தயிர் சாதம் கொண்டும் வழிபடலாம். மாலையில் கார்ன் வெஜிடபிள் சுண்டல்கார்னை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து, அதில் நறுக்கிய கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய் சேர்த்து தாளித்து விட, பூஜைக்கு வரும் சிறு குழந்தைகளுக்கு கொண்டாட்டமாய் அமைந்து விடும் இந்த பிரசாதம்.
மலர்கள்: பவளமல்லி, சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது அதிக பலன்களை தரும். பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, வில்வ இலை போன்றவைகளை துாவுவது நல்லது.
கொடுக்க வேண்டிய தாம்பூலம், 11 வகையான மங்கலப் பொருட்கள் கொடுக்க வேண்டும். முக்கியமாய் ஒன்பது வெளி குடும்பத்து சிறுமியருக்க பட்டுப்பாவாடை சட்டை எடுத்து தானம் செய்வதும், ஐந்து சுமங்கலிகளுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுவதும், நம் குடும்பத்திற்கும், பின் வரும்
சந்ததிகளுக்கும் நன்மை நல்கும்.
விரதங்களின் பலன்கள்: விரதம் நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு கால கட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்
திங்கள் : கணவரின் பரிபூரண அன்பை பெறலாம்.செவ்வாய்: கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
புதன்: நோய்கள் நீங்கும்
வியாழன்: புத்திரபாக்கியம் கிடைக்கும்
வெள்ளி: கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
சனி: செல்வம் பெருகும்
ஞாயிறு: நீடித்த நோயிலிருந்து விடுதலை பெறலாம்; மேற்கொண்டு நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
*விரதம் மேற்கொள்பவர்கள் தரையில் படுத்து உறங்குவதும் மரபு
*ஒவ்வொரு நாளும் வீடு தேடி வரும்
குமரிகளுக்கும், சுமங்கலிக்கும் தன் கையால் புனுகு, ஜவ்வாது, கஸ்துாரி, அரகஜா, சந்தனம் குங்குமம் சாந்து ஸ்ரீசூர்ணம், மை ஆகியவற்றை இடலாம்; இசைப்பாடல்களை பாடலாம். ஸ்ரீதேவிப் பாடல்களாய் இருக்க வேண்டும்.
ஏன் ரிஷப வாகனம்?: காளை மாடு, தன் எஜமானுக்கு எவ்வாறு எந்த எதிர்பார்ப்புமின்றி பணி செய்கிறதோ, அதைப்போல ஒரு சாதகன், உண்மையான பக்தியுடன் இறைவனுக்கு தொண்டு செய்து வரும்போது, அதன் பலனாக அவனது பழைய வாசனைகள் அறுபட்டு, பிறவா வரம் கிடைக்கப் பெறுகிறான். காளையின் இந்த அணுகுமுறையை பின்பற்றி, நாம் அனைவரும் வாழ்வின் அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்று, முக்கிய பேறு அடையலாம் என்று சமஸ்கிருத நுால் விளக்கம் அளிக்கிறது. தர்மத்தை கடைப்பிடித்து, தமக்கு உண்மையாக சேவை செய்பவர்கள் மூலமாக, அன்னை பராசக்தி, தன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை: சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்; அரசியலிலும், வேலையிலும் பதவிகள் தொடர வேண்டும்; எந்த தொழிலில் ஈடுபட்டாலும், வெற்றி மீது வெற்றி வந்து நம்மை மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான சிறப்பு பூஜையும், வழிபாடுகளும் தான் இந்த நவராத்திரி பூஜையின் சிறப்பு!
இதற்கென்று இருக்கும் பூஜை வழிமுறைகளும், மந்திரங்களும் முறையாக தெரியவில்லையே என்ற கவலைப்படுவதை விட, பொறுமையாக தெரிந்து செய்வது நல்லது.முக்கியமாய், கற்று செய்ய ஆரம்பிக்கும் வரை, ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம... என்பதை 108 முறை சொன்னாலே, பூஜைக்கான பலன் கிடைத்து விடும்.
பாட வேண்டிய ராகம் : அடானா, பஞ்சமவர்ண கீர்த்தனை
பாடவேண்டிய பாடல்:
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே!
ஆலவாய் கூத்ர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே!
வைகைத் தலைவியே சரணம் தாயே!
மூல மந்திரம்: ஓம்-மாம்-மகேஷ்வர்யை- நம
காயத்ரி : ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ
மஹேஸ்வரி ப்ரசோதயாத்.
கோலம் : கடலைமாவால் பறவையினம் போல போட வேண்டும்
சிறப்பு : ஸ்ரீசிவனின் அம்சம்
பூஜை நேரம் : காலை 9:00 - 10:30 மணி; மாலை: 6:00 - 7:30 மணி.
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் : ஆயில்யம், கேட்டை, ரேவதி திசை புத்தி நடப்பவர்கள் : புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்