பதிவு செய்த நாள்
03
அக்
2022
06:10
திருப்பதி : திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், ஆறாம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் வெங்கடாத்திரி ராமர் அவதாரத்தில்மலையப்ப ஸ்வாமி மாடவீதியில் வந்து பக்தர்களுக்கு அருளினார்.
திருமலையில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம், கடந்த 27ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ஆறாம் நாளான நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப ஸ்வாமி அனுமந்த வாகனத்தில் வெங்கடாத்திரி ராமர் அவதாரத்தில் மாடவீதியில் எழுந்தருளினார். பகவத் பக்தர்களில் ஹனுமான் முதன்மையானவர். சிறிய திருவடி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். ராமாயணத்தில் மாருதியின் நிலை தனித்துவமானது. சதுர்வேத நிபுணராகவும், நவவ்யாகரண வித்வானாகவும், லங்காபிகாரராகவும் புகழ்பெற்றவர் ஆஞ்சநேயர். அவர் தன் தோளில் மட்டுமல்லாமல், மனதிலும் ராமரை எப்போதும் வைத்திருக்கிறார். மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க, அர்ச்சகர்கள் மலையப்ப ஸ்வாமிக்கும், ஸ்ரீதேவி - பூதேவிக்கும் மூலிகை வெந்நீரால் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினர். திருமஞ்சனத்தின் போது இவர்களுக்கு பல்வேறு உலர் பழங்கள், தானியங்கள், பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன. பட்டு வஸ்திரம் சாற்றி வைர வைடூரிய ஆபரணங்களால் அலங்கரித்தனர். பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, ஆறாம் நாள் இரவு, வெங்கடாத்திரிநாதன் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். இந்த வாகன சேவை மூலம் பக்தர்கள் கஜேந்திரனுக்கு கிடைத்த மோட்சம் தங்களுக்கும்கிடைக்கும் என்று மனதார வேண்டிக் கொள்கின்றனர்.
தங்கத்தேரில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி: திருமலையில் ஆண்டுதோறும் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், ஆறாம் நாள் மாலை தங்கத்தேரில் உற்சவமூர்த்திகள் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். அதன்படி நேற்று மாலை 4:00 மணிக்கு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி எழுந்தருளினர். ஏழுமலையான் கோவில் முன்பிருந்து புறப்பட்ட தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர்.