பதிவு செய்த நாள்
22
ஆக
2012
10:08
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், 16 லட்சம் ரூபாய் வசூலானது.சேலம் மாநகரில் பிரஸித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி பண்டிகையின் போது, மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அம்மனை தரிசித்து, வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் மற்றும் காணிக்கை செலுத்துவர். கோட்டை மாரியம்மன் கோவிலில் உள், வெளி பிரகாரங்களில், பத்து நிரந்தர உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. ஆடி பண்டிகையின் போது, பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கூடுதலாக ஏழு உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. ஆடி பண்டிகை முடிவடைந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பழனிக்குமார், சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் உமாதேவி, ஆய்வாளர் தமிழரசு ஆகியோர் தலைமையில், நேற்று காலை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள, 17 உண்டியல்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மொத்தம், 16 லட்சத்து, 35 ஆயிரத்து, 868 ரூபாய் வசூலானது. மேலும், 113 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.கடந்த ஆடி பண்டிகையை விட, இந்தாண்டு ஆடி பண்டிகை மூலம் கோட்டை மாரியம்மன் உண்டியலில், ஒன்றரை லட்சம் ரூபாய் கூடுதலாக காணிக்கை வசூலாகியுள்ளது.