பதிவு செய்த நாள்
22
ஆக
2012
10:08
சபரிமலை: ஆவணி மாத பூஜைகள் முடிந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நேற்று அடைக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்காக, வரும், 27ம் தேதி மாலை நடை திறக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை, 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அதன்பின், கோவிலில் தினமும் மாத மற்றும் சிறப்பு பூஜைகளான, சகஸ்ர கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், உதயஸ்தான பூஜை மற்றும் படி பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. இந்த பூஜைகள் முடிந்து, நேற்றிரவு, 10 மணிக்கு, மூலவருக்கு விபூதி அபிஷேகம் செய்வித்து, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்காக, ஒவ்வொரு ஆண்டும்,கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், வரும், 27ம் தேதி மாலை 5:30 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள், 28ம் தேதி முதல், 31ம் தேதி வரை பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும். ஓணம் பண்டிகை பூஜைகள் முடிந்து, 31ம் தேதி இரவு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.