பதிவு செய்த நாள்
22
ஆக
2012
11:08
திருவள்ளூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒரு அடி முதல், ஆறு அடி உயரத்திலான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி, செப்.,19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக திருவள்ளூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த பர்வீண்லால் ஈடுபட்டு உள்ளார். ஒரு அடி முதல், ஆறு அடி வரை உயரத்திலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தனது குழுவினருடன் ஈடுபட்டு உள்ளார்.சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில், "பிளாஸ்டர் ஆப்பாரிஸ் மூலம் இச்சிலைகள் தயாரிக்கப் படுகின்றன. ஒரு குழுவினர் சிலையை தயாரிக்கின்றனர். மற்றொரு குழுவினர் விநாயருக்கு வர்ணங்கள் தீட்டி அழகுபடுத்து கின்றனர்.சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பர்வீண் லால் கூறியதாவது:கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரில் இருந்து, திருவள்ளூருக்கு வந்தேன். என்னிடம், 15 பேர் உள்ளனர். அவர்களது உதவியுடன் விநாயகர் சிலைகள் செய்கிறேன். உற்பத்தியான சிலைகளை மாவட்டம் முழுவதும் மூன்று சக்கர சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்.ஒன்று முதல், மூன்று அடி வரை உள்ள சிலைகள், 50 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மூன்று அடி முதல் ஆறு அடி வரை உள்ள சிலைகள், வர்ணம், சிலை தயாரிப்பு செலவுகளை அடிப்படையாகக் கொண்டு, 5,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.இவ்வாறு பர்வீண்லால் கூறினார்.