திருமலை தேவஸ்தான வாரிய தலைவர் பதவிக்கு போட்டா போட்டி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2012 11:08
ஐதரபாத்: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிகாலம் நிறைவடைய இருப்பதையொட்டி, அத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை பிடிக்க ஆந்திராவில் ஆளும் காங். கட்சியில் போட்டா போட்டி நிலவ துவங்கிவிட்டது. எனினும் ஒரு புறம் பதவிகாலத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க கோரியும் டில்லி வரை தங்களது செல்வாக்கினை காட்ட முயற்சி செய்து வருகின்றனர். ஆந்திராவில், புகழ்பெற்ற திருமலைதிருப்பதி வெங்கடாஜலபதி கோயிலின் தேவஸ்தான (டி.டி.டி) தலைவராக காணுமுரி பப்பிராஜூ உள்ளார். தவிர வாரியத்தின் தலைமை உறுப்பினர்களாக முத்தியம்ரெட்டி, சூரியபிரகாஷ்ராவ், பம்வுலா ராஜேஸ்வரிதேவி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ.க்கள் ஆவர். முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் தயவினால் இப்பதவியை கடந்த ஆண்டு பெற்றனர். தற்போது இவர்களின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து கடந்த நேற்று முன்தினம் தேவாஸ்தான கடைசி வாரியக் கூட்டம் நடந்தது. இதில் பதவிகாலம் நிறைவடைய உள்ளவர்கள் கலந்து கொண்டனர். இதில் மீண்டும் அப்பதவியை தக்க வைக்க இவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்பு தேவஸ்தான தலைவர், உறுப்பினர்களின் பதவிகாலம் இரு ஆண்டுகள் இருந்தது. தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டது. எனவே மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்க காய் நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள மேற்கண்ட தலைவர் பதவிக்கு குறி வைத்து முன்னாள் டி.டி.டி.தலைவரும், காங்.எம்.பி.யான ஆதிகேசவலு நாயுடு, சம்பாசிவராவ் ஆகியோர் , காங். மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். தவிர மற்றொரு காங். எம்.பி.யான சுப்பாராமிரெட்டி, தனது மனைவி இந்திராவிற்கு எப்படியாவது தலைவர் பதவியை வாங்கிட டில்லியில் முகாமிட்டுள்ளார். இதற்கிடையே டி.டி.டி .தலைவர் பதவி காலத்தினை இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்க கோரி , அறநிலையத்துறை முதன்மை செயலர் சித்ரா ராமச்சந்திரன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.