ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 01:10
கோவையில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் ‘வேஸ்கோ, தீஸ்கோ’ கோஷங்களுடன் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை ராஜ வீதி, ஆர்ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயில்களில் குறிப்பிட்ட( தேவாங்கர்) சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் கத்தி போடும் திருவிழா நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி நவராத்திரி விழாக்காலம் தொடங்கியது. அன்றிலிருந்து விரதம் இருந்து, 10-ம் நாளான விஜயதசமி அன்று பாராக் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்கள் வழக்கம். அந்த வகையில் ,இன்று கத்தி போடும் பாராக் கத்தி திருவிழா ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆர்.எஸ்.புரத்தில் காலை 5.30 மணிக்கு தொடங்கிய வழிபாடு நடத்தப்பட்ட கலசத்துடன் தொடங்கிய ஊர்வலம் காலை 9 மணிக்கு ராஜ வீதி ஸ்ரீ ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலை வந்தடைந்தது. இதேபோல சாய்பாபாகாலனி நெசவாளர் காலனியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஊர்வலம், காலை 11 மணியளவில் ஆர்.ஜி.வீதி புது செளடம்மன் கோயிலை வந்தடைந்தது. இந்த இரு ஊர்வலங்களிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது இரு கைகளிலும் கத்தியால் கீறி, ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மனை துதித்து ஆடிப்பாடி ‘வேஸ்கோ, தீஸ்கோ’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் கத்தி போட்டுக் கொண்டனர்.