பதிவு செய்த நாள்
07
அக்
2022
10:10
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து விழா கொண்டாப்பட்டது. இதன் நிறைவு விழாவையொட்டி இன்று காலை வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்றிரவு பழையப்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவில், சீனிவாச பெருமாள் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், கவீஸ்வரர் கோவில், ராமர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில், சோமேஸ்வரர் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஞான விநாயகர் கோவில், கல்கத்தா காளிக் கோவில் என 12 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் பவனி சென்றது.அனைத்து தேர்களும் காலை 7:30 மணிக்கு பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வன்னி மரத்தின் இலைகளை வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம் என்பதால், இலைகளைப் பெற கூட்டம் அலைமோதியது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதையொட்டி போலீசார் பாதுப்பில் ஈடுபட்டிருந்தனர்.