பதிவு செய்த நாள்
07
அக்
2022
11:10
தஞ்சாவூர்: சுவாமிமலை அருகே, 23 அடி உயர ஐம்பொன்னால் ஆன, ஆனந்த நடராஜர் சிலை உருவாக்கப்பட்டு, லாரி மூலம், வேலுார், நாராயண சக்தி பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திம்மக்குடி கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் வரதராஜன், 2010ம் ஆண்டு, ஐம்பொன்னால், ஒற்றை வார்ப்பு முறையில், 23 அடி உயரத்தில் நடராஜருக்கு சிலை வடிக்கும் பணியை தொடங்கினார். போதிய நிதி இல்லாததால் பணி நின்றது.பின், 2012-ம் ஆண்டு, வேலுார் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில், செப்., 12ம் தேதி, நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று ஆனந்த தாண்டவ நடராஜர் சிலையின், 3 டன் பீடம் தனியாகவும், 12 திருவாச்சியுடன் சுவாமி சிலை தனியாகவும், இரண்டு லாரிகளில் வேலுாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிலை வடிவமைத்த வரதராஜன் கூறியதாவது:ஆனந்த தாண்டவ நடராஜர் சிலை 23 அடி உயரம், 17 அடி அகலம், 15 டன் எடையில் உருவாக்கப்பட்டது. திம்மங்குடியில் இருந்து நீலத்தநல்லுார், தா.பழூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் சாலை வழியாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோவிலுக்கு நாளை செல்ல வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.