பதிவு செய்த நாள்
09
அக்
2022
10:10
போத்தனூர்: சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில், கோவை மாவட்ட குலாளர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்கள் சமேத வெங்கடேசப்பெருமாள் தேவதைகளின் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று காலை முகூர்த்த கால் நடுதலுடன் துவங்கியது, இதையடுத்து குத்துவிளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து மகளிரணியினர் சித்திவினாயகர், சக்தி வினாயகர், ஜெயமாரியம்மன் கோவிலிலிருந்து சீர்வரிசை எடுத்து வந்தனர்,
இதனை தொடர்ந்து திருக்கல்யான வைபவம் மங்கள இசையுடன் துவங்கியது. கணபதி பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கோ பூஜை, பெருமாளுக்கு ஆவாஹான உபசார பூஜைகள், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனைகள், வேத கோஷம், ரக் ஷாபந்தனம், தேவதைகளுக்கு மூல மந்திர ஹோமங்கள், கன்னிகாதானம் உள்ளிட்டவை நடந்தன. இதையடுத்து மாங்கல்ய தாரணம், வேத சங்கீத உபசாரங்கள், ஆரத்தி, ஆசிர்வாதம். மங்களாசாஸனம் உள்ளிட்டவைகளை பாலாஜி ஷர்மா குழுவினர் செய்தனர். நூராயண ராமானுஜ ஜீயர் சாமிகள் ஆசி வழங்கினார். மதியம் விருந்துடன் விழா நிறைவடைந்தது. திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,700 க்கும் மேற்பட்டோர் திருக்கல்யாணத்தை தரிசித்தனர். குறிச்சி குலாளர் சங்கத்தினர், மகளிரணியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.