பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயில் மேற்கூரை மண்டபம் இடிந்து விழுந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2022 12:10
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மேற்கூரை மண்டபம் மழை காரணமாக இடிந்து விழுந்தது பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூரில் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றானதும் இறைவன் யானைவடிவில் வந்து அசுரனை வதம் செய்த ஆலயமான வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டுமானங்களை உடைய இந்த ஆலயத்தில் இரண்டாம் ராஜராஜன் உள்ளிட்ட பல்வேறு சோழ மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் அமையப்பெற்ற பழமை வாய்ந்த ஒன்றாகும். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதனால் ஆலயம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இன்று மாலை பெய்த கனமழை காரணமாக கால சம்ஹார மூர்த்தி சன்னதியின் மேற்கூரை மண்டபம் காரைகள் திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் இல்லாத காரணமாக யாருக்கும் எந்த காயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பாரம்பரியமிக்க ஆலயத்தை புதுப்பித்து உடனடியாக திருப்பணிகளை துவங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.