திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலின் ஸ்தல வரலாற்றை பக்தர்கள் தெரிந்துகொள்ள வசதியாக மெகா சைஸ் டி.வி., பொருத்தப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற காளி கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளி,ஞாயிறு மற்றும் ஆடி வெள்ளிகிழமைகளில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மதியம் உச்சி கால பூஜையில் தினசரி ஏராளமானோர் பங்கு பெற்று அம்மனை தரிசனம்செய்து செல்வது வழக்கம், கோயில் ஸ்தல வரலாறு, பூஜைகள் குறித்து பக்தர்கள் தெரிந்து கொள்ள வசதியாக அம்மன் சன்னதி முன்பாக பொருத்தப்பட்டுள்ளது. தினசரி இதில் ஸ்தல வரலாறு, பக்தி பாடல்கள், பூஜை நேரம், அதற்குரிய கட்டணம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஒளிபரப்படுகின்றன. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து டி.வி., பொருத்தப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.