செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ராஜகோபுரத்தில் மரம்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2022 05:10
செஞ்சி: செஞ்சி கோட்டையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ள வெங்கட்ரமணர் ராஜ கோபுரத்தில் மரங்கள் வளர்ந்து சிலைகள் இடிந்து விழும் பரிதாப நிலையில் இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கி.பி., 13ம் நுõற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க மலைக்கோட்டை உள்ளது. இந்த கோட்டையின் உள்ளே ஏராளமான கோவில்கள் உள்ளன. இதில் மிகப்பெரியதும், முக்கியமான கோவிலுமாக 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருவது சந்திரகிரி மலையடிவாரத்தில் உள்ள வெங்கட்ரமணர் கோவில். சிறந்த கட்டடங்களையும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்த இந்த கோவிலை கி.பி., 1540 முதல் 1550 வரை செஞ்சியை ஆட்சி செய்த முத்தையாலு நாயக்கர் கட்டியுள்ளார். பெரிய அளவிளான விழாக்களும், பூஜைகளும் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இந்த கோவிலில் காணப்படுகின்றன. ஆற்காட்டு நவாப்பின் படை யெடுப்பின் போது கோவிலின் பெரும் பகுதி சேதமாக்கப்பட்டது. இக்கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துாண்கள் இருந்ததால் இக்கோவிலுக்கு ஆயிரம் கால் மண்டபம் என மற்றொரு பெயரும் உண்டு. தற்போது இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வெங்கட்ரமணர் கோவில் உள்ளது. இந்த துறையினர் கோவிலில் கருவரை உட்பட பல்வேறு பகுதியில் உள்ள கோபுரங்களையும்புதுப்பித்து பாதுகாத்து வருகின்றனர்.
இதில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் ஏராளமான சுதை சிற்ங்களுடன் உயர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறது. இந்த ராஜ கோபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணியும் செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் ராஜகோபுரத்தின் உச்சியில் பல இடங்களில் மரங்கள் முளைத்துள்ளன. கோபுரத்தின் 7 வது நிலையில் வளர்ந்துள்ள பெரிய மரம் அந்த பகுதி கட்டடத்தை பலவீணப்படுத்தி உள்ளது. மேலும் மரம் வளர்ந்தால் 7 வது நிலையும், இதன் மீதுள்ள கோபுர கலச பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்தியாவில் உள்ள வரலாற்று இடங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதில் செஞ்சி கோட்டை 5 வது இடத்தில் உள்ளது. அத்துடன் வெங்கட்ரமணர் கோவிலில் அடிக்கடி விழாக்கல் நடந்து வருவாதல் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மரம் வளர்ந்து பலவீணமாக உள்ள ராஜகோபுரத்தில் இருந்து சிலைகள் இடிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீதோ, பக்தர்கள் மீதோ விழுத்தால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்களே, நன்கொடையாளர்களே ராஜகோபுரத்தை செப்பனிட முடியாது. இதனால் பக்தர்கள் ஏதும் செய்ய முடியாமல் உள்ளனர். இப்போது மரங்கள் முளைத்து சிலைகள் அழிந்து இடிந்து வருது பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் வரலாற்று ஆர்வலர்களிடமும் இடிந்து வரும் ராஜகோபுரத்தை செப்பனிடாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்திய தொல்லியல் துறையினர் வெங்கட்ரமணர் கோவில் ராஜ கோபுரத்தை புதுப்பிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக ராஜா கோபுரத்தில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.