காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன். இவர் 1968ல் செகந்தராபாத்தில் முகாமிட்டிருந்த காஞ்சி மஹாபெரியவர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க நண்பர்களுடன் சென்றிருந்தார். ஊர் திரும்பும் போது ‘‘பிரபோ... தங்களைப் பிரிய மனமில்லையே’’ என்றழுதார். புன்னகையுடன் விடையளித்தார் மஹாபெரியவர். அன்று மதியம் செகந்திராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு அவர்கள் வந்தனர். அங்கிருந்து சென்னைக்கு இரவில் தான் ரயில் கிளம்பும். அதில் செல்வதற்காக டிக்கட் கேட்ட போது ரயில்வே ஊழியர், ‘இன்னும் அரைமணி நேரத்தில் சிறப்பு ரயில் ஒன்று சென்னைக்கு செல்ல இருக்கிறது. டிக்கட் தரட்டுமா?’’ எனக் கேட்க அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மஹாபெரியவரின் அருளை சிந்தித்தபடியே ரயிலில் பயணித்தனர்.
அதன்பின் இன்னொரு சம்பவமும் நடந்தது. காஞ்சி மடத்தில் பெற்ற திருப்பதி பெருமாள் படம், மஹாபெரியவர் படங்களுக்கு பிரேம் மாட்ட ஒரு கடையில் கொடுத்தார் சந்திரசேகரன். அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து நடக்க கடையே சேதமானது. அதை விசாரிக்க அவர் சென்ற போது, ‘‘கவலை வேண்டாம். படங்கள் பத்திரமாக உள்ளன’’ என்றார் கடைக்காரர். இதுவும் மகானின் அருளே என மகிழ்ந்தார். காஞ்சி மஹாபெரியவரிடம் படங்களை காண்பிக்க காஞ்சிபுரம் சென்றார். படங்களை ரசித்துப் பார்த்த பெரியவர் அவற்றின் மீது பூத்துாவி ஆசியளி்த்தார்.
மற்றொரு முறை சந்திரசேகரன் தன் நண்பரான கிருஷ்ணனுடன் திருக்கடையூர் சென்றிருந்தார். அங்கு அமிர்தகடேஸ்வர்(சிவன்) சன்னதியில் சிவலிங்கத்தின் மீது காஞ்சி மஹாபெரியவர் தெரிவதைக் கண்டார். ஆச்சரியப்பட்ட கிருஷ்ணன், ‘‘சிவலிங்கத்தின் மீது மஹாபெரியவர் தெரிகிறாரே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டார். ‘இது வெறும் பிரமையோ’ என வெளியில் சொல்ல தயங்கினேன். ஆனால் நீங்கள் சொல்லியதும் அவரை தரிசிப்பது நிஜம்தான் என்பதை உணர்ந்தேன்’ என சந்திரசேகரன் கண்ணீர் சிந்தினார்.