பதிவு செய்த நாள்
16
அக்
2022
10:10
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
புரட்டாசி மாதத்தில், சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மாதம்பட்டி அடுத்த பீட் பள்ளத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஐந்தாவது சனிக்கிழமை விழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, திம்மராய பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பரதநாட்டியம் அரங்கேற்றம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, மகா தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து, பகல், 12:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு, அன்னதானம் நடை பெற்றது. அதேபோல புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஒட்டி, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.