திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் மேகநாத சுவாமி கோயிலில் உள்ள லலிதாம்பிகை ஸ்ரீசக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அருள்புரிகிறாள். வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்ட நிலையில் காட்சி தருகிறாள். காஞ்சி மஹாபெரியவருக்கு மிகவும் பிடித்தமான தலம் இது. வைகாசி பவுர்ணமி, விஜயதசமி, மாசி அஷ்டமியும், நவமியும் இணையும் நாட்களில் நடக்கும் நெய்க்குள தரிசன வழிபாடு இங்கு பிரசித்தம். இதற்காக அம்மன் சன்னதி முன் 16 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி அதன் மீது தென்னை மட்டை, ஓலைகளை அடுக்கி மூன்று அடுக்குகளாகப் பிரிப்பர். அதில் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, தயிர் சாதத்தை படையல் இடுவர். சர்க்கரைப் பொங்கலின் நடுவே குளம் போல அமைத்து, அதில் நெய்யை ஊற்றுவர். அதற்கு நெய்க்குளம் என்று பெயர். அலங்காரம் செய்யப்பட்ட அம்பாளின் வடிவம் அதில் தெரியும். இதனை ‘நெய்க்குள தரிசனம்’ என்பர். இதைக் காணும் பக்தர்களின் வாழ்வில் துன்பம் விலகி நினைத்தது நடக்கும். முக்தி கிடைக்கும்.