பதிவு செய்த நாள்
21
அக்
2022
08:10
துாத்துக்குடி: துாத்துக்குடி சிவன் கோயில் திருக்கல்யாண திருவிழா தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. தேரை வடம்பிடித்து அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர்ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 9ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, சிலம்பாட்டம், வால்சுருள் விளையாட்டு, தப்பாட்டம், கரகாட்டம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பாள் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கில், அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் வீதி உலா நடைபெறும். சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அருள்மிகு சங்கரராமேஸ்வரா் ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி தந்து மாலை மாற்றுதல் நிகழ்வும், தொடா்ந்து இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் அன்பு மணி, தக்கார் வெள்ளைச்சாமி, செயல் அலுவலா் வீ.தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்துள்ளனா்.