பதிவு செய்த நாள்
26
அக்
2022
08:10
பழநி : பழநி மலை முருகன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. அக்.,31 வரை நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,30 மாலை சூரசம்ஹாரம், 31ல் திருக்கல்யாணம் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோயில் யானை கஸ்துாரி மலைக்கோயில் வர அங்கு நடந்த உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதுபோல் திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்ஸவருக்கு காப்பு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் சஷ்டி விரதம் துவங்கினர். பக்தர்கள் மதியம்12:00 மணி வரை மலைக்கோயில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் சூரிய கிரகணம் காரணமாக மதியம் 2:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இரவு 7:00 மணிக்கு நடை திறந்து சம்ரோட்சன பூஜை, சாயரட்சை பூஜை நடந்தது. சூரசம்ஹாரம் நடக்கும் அக்., 30 மலைக்கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, அதன்பின் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடந்தபின் கோயில் நடை சாத்தப்படும். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா, முத்துக்குமார சுவாமி மயில்வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா, இரவு 9:00 மணிக்கு நடக்கும் சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடக்கும்.அக்.,31 காலை 9:30 மணிக்கு மலைக்கோயிலிலும் இரவு 7:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலிலும் வள்ளி, தேவசேனா, முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.