பதிவு செய்த நாள்
26
அக்
2022
08:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் நேற்றே துவங்கியது. கோயிலில் காலை 8:30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்கை விநாயகர் முன்பு யாக பூஜைகளை தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜை முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.
சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு அவர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழ சாரும், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும். சூரசம்ஹாரம்: தினம் இரவு 7:00 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பார். தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக். 29ல் வேல் வாங்குதல், அக். 30ல் சூரசம்ஹாரம், அக். 31 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள் , கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் திருவிழா துவங்கும் வகையில் நேற்று மூலவர் முருகப்பெருமானுக்கு மஹா அபிஷேகம், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகப் பெருமானுக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை நடந்தது. அக். 29ல் வேல் வாங்குதல், அக். 30ல் சூரசம்ஹாரம், அக். 31ல் சீர்தட்டு அழைத்தல் , திருக்கல்யாணம் நடக்கிறது.