அமாவாசை தீர்த்தவாரி: துலா கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2022 10:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியின் போது தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி, சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்ம வனம் என்ற மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருவம் கொண்டு இருவரும் ஆனந்த நடனம் மாயூர தாண்டவம் ஆடினர். பிரம்மா ஸ்தபித்த இந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறியது. அதனை கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் மயில் உருவு நீங்கி தேவியாக சுய உருவம் பெற்றாள். சிவமயிலும் சிவபெருமானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கௌரி ஆகிய நான் மயில் உரு கொண்டு பூஜித்ததால் கௌரி மாயூரம் என்று இந்த ஊருக்கு பெயர் வழங்க வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாளிக்க வேண்டும் என்று வேண்டினால் என்பது ஐதீகம். இதனை நிறைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடந்து வருகிறது. இவ்விழா கடந்த ஐப்பசி 1ம் தேதி முதல் உலா உற்சவம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான அமாவாசை தீர்த்தவாரி விழா நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசி விஸ்வநாதர், வதானேஸ்வரர் கோவிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காவிரி கரைக்கு எழுந்தருளினார். அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சார சுவாமிகள் மேதா தக்ஷிணாமூர்த்திக்கு பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து காவிரியின் இரு கரைகளிலும் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி தீர்த்தம் கொடுக்க தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் உட்பட திரளான பக்தர்கள் துலா கட்ட காவிரியில் புனித நீராடினர்.