திருச்செந்துார் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2022 10:10
துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசன தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். காலை 7:30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. சூரிய கிரகணம் நிகழ்வினால் மாலை 4:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மாலை 6:45 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
7:30க்கு கிரிவீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் தீபாராதனை, அபிஷேகம் நடக்கிறது. 6ம் திருநாளான அக்., 30 மாலை 4:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்வுக்குப் பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது. அக்.,31ல் 7ம் திருநாளன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. நவ.,5 வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. திருச்செந்துார் கோயிலில் ரூ.300 கோடியில் பல்வேறு புதிய கட்டுமான பணிகள் நடக்க இருப்பதால் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவிற்கு கோயில் பிரகாரத்தினுள் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை. விரதம் இருப்பதற்காக 18 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்செந்துார் கந்த சஷ்டி விழாவில் பங்கேற்க நேற்று இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வர துவங்கினர்.