பதிவு செய்த நாள்
28
அக்
2022
08:10
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் நடந்த, பூ புத்தரி அறுவடை திருவிழாவில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான, பனியர் சமுதாய மக்கள் ஆண்டுதோறும் பூ புத்தரி எனப்படும் நெல் அறுவடை திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஐப்பசி மாதம் 10 நாட்கள் விரதம் இருந்து நெல் அறுவடை செய்வார்கள். பந்தலூர் அருகே பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில், சந்திரன் என்பவர் 10 நாட்கள் விரதம் இருந்து, சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், கேரளா மாநிலம் ஆலத்தூர் என்ற இடத்தில், உள்ள வயலுக்கு பழங்குடியின மக்கள் மற்றும் குந்தலாடி பகவதி அம்மன் கோவில் நிர்வாகிகள் இணைந்து சென்று, இறைவனை வழிபட்டு பின்னர் முதிர்ந்த நெல் கதிர்களை அறுவடை செய்து, பழங்குடியின மக்களின் வாத்திய இசையுடன் பொன்னானி மகாவிஷ்ணு கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் குருக்கள் சதீஷ் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குந்தலாடி, பெக்கி, ஏலமன்னா உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு , நெற்கதிர், அரச இலைகளை வழங்கிய பின்னர் பொதுமக்களுக்கு இவற்றை பிரசாதமாக வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பழங்குடியினர் சங்க நிர்வாகிகள் வேலன், குமரன், செங்குட்டுவன், பகவதி அம்மன் கோவில் கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயபிரகாஷ், துணைச் செயலாளர் பாபு உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.