பதிவு செய்த நாள்
28
அக்
2022
10:10
களியக்காவிளை: செங்கல் சிவபார்வதி கோவில் மகா சிவலிங்கத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் சர்வதேச விருது வழங்கி சிறப்பித்து உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் செங்கல் பகுதியில் மகேஸ்வரம் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறையில் சிவன் , பார்வதி காட்சி தருகின்றனர். கருவறையின் அருகில் கணபதி, முருகன் சன்னதிகள் அமைந்து உள்ளன. கருவறையை சுற்றிலும் 12 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. கோவிலில் உள்ள கணபதி மண்டபத்தில் கணபதி
பகவானின் 32பாவனைகளை குறிக்கும் வகையில் 32 கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. மேலும் கோவில் வளாகத்தில் பிரமாண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கம் திரிவேணி சங்கம புண்ணிய தீர்த்தம், புண்ணிய தலங்களில் உள்ள மண், பஞ்சலோகங்கள், நவதானியங்கள், நவபாஷாணங்கள், நவ புஷ்பங்கள், 64 வகையான அவுஷத கூட்டுகளுடன் பூஜை விதிகளின்படி அமைக்கப்பட்டு உள்ளது. 111.2 அடி உயரம் உள்ள இந்த சிவலிங்கத்தின் உட்பகுதி 8 நிலைகளை கொண்டது.
சிவலிங்கத்தின் முதல் தளம் பக்தர்கள் அபிஷேகம் செய்து புண்ணிய தீர்த்தம் எடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. ஏழு நிலைகளையும் கடந்து எட்டாவது நிலையில் சிவபார்வதி தரிசனம் கிடைக்கிறது. இந்த மகா சிவலிங்கம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியாபுக் ஆப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ஆப் ரெக் கார்ட்ஸ் போன்ற விருதுகளை பெற்று உள்ளது. தற்போது இந்த சிவலிங்கம் உலக அளவில் பிரசித்திபெற்று உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வேர்ல்டு ரெக் கார்ட்ஸ் யூனியன் அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் செங்கல் வந்து சிவலிங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கையை வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியனில் அவர்கள் சமர்ப்பித்தனர். இதை அடுத்து நேற்று கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேர்ல்டு ரெக் கார்ட்ஸ் யூனியன் அமைப்பின் நிர்வாக மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் இந்த உலக சாதனை விருதை செங்கல் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் , நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ., ஆன்சலன் தலைமை வகித்தார். ஹரிகுமார் வரவேற்றார். கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன், வ ட்டியூர்காவு தொகுதி எம்.ஏல்.ஏ., பிரசாந்த், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், அருவிபுறம் மடாதிபதி சுவாமி சாந்திரானந்தா உள்ளிட்டோர் பேசினர். கோவில் மேல்சாந்தி குமார் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக அதிகாரி துளசிதாசன் நாயர் நன்றி கூறினார்.