பதிவு செய்த நாள்
28
அக்
2022
08:10
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கான புனித யாத்திரை முடிவுக்கு வந்தது. குளிர்காலத்தையொட்டி, இந்தக் கோவில்கள் நேற்று மூடப்பட்டன. உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சார்தாம் எனப்படும் நான்கு புண்ணிய தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகியவை அமைந்துள்ளன. இவற்றுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். இந்த ஆண்டு, 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நான்கு தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர். குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், இந்தக் கோவில்களின் நடை மூடப்படும். இதன்படி, கங்கோத்ரி கோவில் நேற்று முன்தினம் மூடப்பட்டது. இதையடுத்து, கேதார்நாத், யமுனோத்ரி கோவில்கள் நேற்று பூஜைகள் செய்யப்பட்டு மூடப்பட்டன. பத்ரிநாத் கோவில், நவ., 19 வரை திறந்திருக்கும்.