லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவிலுக்கு பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2022 05:10
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அரச மரத்து விநாயகர் பாலாலயம் நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தின் முன் அரசமரத்து விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மேடை மிகவும் சிதிலமடைந்து பக்தர்கள் ஏறிச்சென்று விநாயகரை வழிபட முடியாமல் இருந்தது. மேலும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் கடந்த நிலையில், விரைவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்குவதற்கு ஏதுவாக அரசமரத்து விநாயகருக்கு முதலில் திருப்பணிகள் செய்திட இந்து சமய அறநிலைத்துறையினர் முடிவெடுத்தனர். இதனையடுத்து ரூ 1.62 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேடைகள் அமைக்கும் பணிகளுக்கான பாலாலயம் நேற்று நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் சிவக்குமார், தியாகராஜன் உள்ளிட்டோர் வாஸ்து ஹோமம், கணபதி ஹோமத்தை செய்தனர். இதில், செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், அறங்காவலர்கள், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தினர், பேரூராட்சி தலைவி தனலட்சுமி, நகரச் செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.