பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
மேலூர்: மதுரை மேலூர் அருகே பஞ்ச பாண்டவர் மலையை, குவாரி உரிமையாளர்களின் பிடியில் இருந்து மீட்க, தொல்லியல் துறை போதிய அக்கறை காட்டவில்லை. இம்மலையை சுற்றி வேலி அமைக்க கொண்டு வந்த கல் தூண்கள், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. மேலூரை அடுத்து கீழவளவில், 61 ஏக்கரில் சிறு சிறு குன்றுகளாக ஏராளமான மலைகள் உள்ளன. சகுனியின் சூழ்ச்சியால் சொக்கட்டான் விளையாட்டில் தோல்வி அடைந்த பஞ்ச பாண்டவர்கள், 12 ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழும் அஞ்ஞாத வாசமும் இருக்க வேண்டும் என துரியோதனன் உத்தரவிட்டார். அந்த ஒரு வருட காலத்தை பஞ்ச பாண்டவர்கள், இம்மலையில் தங்கி கழித்ததாக நம்பிக்கை உள்ளது. எனவே, இதனை புனித மலையாக கருதி, பங்குனி உத்திரத்தின் போது கிரிவலமும் வருகின்றனர். இத்துடன், சமண துறவிகள் இந்த மலையில் தங்கி, சமண பள்ளிகள் நடத்தி வந்துள்ளனர். அதற்கு சாட்சியாக பல இடங்களில் சமண படுகைகள் உள்ளன. இத்துடன் புத்தர், மகாவீரர் சிற்பங்கள் உள்ளன. இம் மலையை சுற்றி வேலி அமைக்க தொல்லியல் துறை ஏற்பாடு செய்தது. இதற்காக, கல்தூண்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், சில பகுதிகளை குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து இருந்ததால், முழுமையாக அமைக்க இயலாமல், மீதியுள்ள கல்தூண்களையும், கம்பிகளையும் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தொல்லியல் துறை ஊழியர் ஒருவர் கூறியதாவது: தொல்லியல் துறைக்கு சொந்தமான மலையில் இருந்து 300 மீட்டருக்கு தள்ளி தான் கற்கள் எடுக்க வேண்டும். ஆனால், மலை மீதுள்ள சிற்பங்களில் இருந்து 300 மீட்டர் என கணக்கிட்டு, மலையின் பின்பகுதியிலேயே கற்களை வெட்டி எடுத்தனர். தொடர் போராட்டத்திற்கு பிறகு அப்பணி நிறுத்தப்பட்டது. அதன்பின் மலையை ஒட்டி கற்களை அடுக்கி வைத்தனர். ஆக்கிரமிப்பு குறித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது, மலையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுந்தது. இதனால் தொல்லியல் துறைக்கு சொந்தமான பகுதியில் வேலி அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அடுக்கிய கற்களை அப்புறப்படுத்தும்படி கூறியும், குவாரி உரிமையாளர்கள் அகற்றவில்லை. இதனால் கல்தூண்கள் பயனற்று கிடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பூசாரி பழனிச்சாமி கூறுகையில், "இங்குள்ள முருகன் கோவிலில் திருமணங்கள் நடக்கும். பங்குனி உத்தரத்தன்று காவடி எடுத்து மலையை சுற்றி வருவதும், பூக்குழி இறங்குவதும் பல ஆண்டுகளாக நடக்கிறது. மலையை சுற்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்துள்ளதால், கிரிவல நிகழ்ச்சி தற்போது நடக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை, என்றார். மலையை சுற்றி அடுக்கப்பட்டுள்ள கற்களை அகற்றி, வேலி அமைக்க அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.