பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
சபரிமலை: ஓணம் பண்டிகை உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு, பக்தர்களுக்கு தினமும், ஓணம் விருந்து வழங்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்காக திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு ஓணம் விருந்து (ஓண சத்யா), வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டு ஓணம் பண்டிக்கைக்காக, கோவில் நடையை, இன்று மாலை, 5:30 மணிக்கு தலைமை அர்ச்சகர் (தந்திரி) கண்டரரு ராஜீவரு முன்னிலையில், முதன்மை அர்ச்சகர் (மேல்சாந்தி) பாலமுரளி நம்பூதிரி நடையை திறப்பார். பின், ஓணம் விருந்திற்கான, காய்கறிகளை, முதன்மை அர்ச்சகர் பாலமுரளி நம்பூதிரி, சுவாமிக்கு படைத்து, அவற்றை நறுக்கி கொடுத்து, விருந்து தயாரிப்பிற்கான ஏற்பாடுகளை துவக்கி வைப்பார். நாளை அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். அன்று உத்திராட நட்சத்திரத்தில், ஓணம் விருந்தின் முதல் நாளில், முதன்மை அர்ச்சகர் சார்பில் பக்தர்களுக்கு விருந்தளிக்கப்படும். நாளை (28ம் தேதி) உச்சிக்கால பூஜைக்குப் பின், அய்யப்பன் படத்திற்கு முன்னால், தலைமை மற்றும் முதன்மை அர்ச்சகர்கள் சுவாமிக்கு, விருந்து பதார்த்தங்களை படைப்பர். தொடர்ந்து, பால் பாயசம், அடை பிரதமன் ஆகிய இரு பாயசங்களுடன், 20 வகை பதார்த்தங்களை கொண்ட ஓணம் விருந்து பக்தர்களுக்கு பரிமாறப்படும்.நாளை மறுநாள் (29ம் தேதி) திருவோணத்தன்று, டாக்டர் மணிகண்ட தாசன் சார்பிலும், தொடர்ந்து 30 மற்றும் 31ம் தேதிகளிலும், ஓணம் விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும். பூஜைகள், ஓணம் விருந்து முடிந்து, 31ம் தேதி இரவு, 10 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படும்.