பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மூலவர் சன்னிதியில், ஒன்றரை கிலோ தங்கத்தால் வேயப்பட்ட, தங்கக் கதவுகளை, சென்னை தொழிலதிபர் காணிக்கையாக வழங்கினார். கேரளா, திருச்சூர் மாவட்டம், குருவாயூரில், பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் சன்னிதியில் உள்ள கதவுகளை, தங்கத்தால் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த தங்கக் கதவை, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரகுநாத், காணிக்கையாக செய்து அளிக்க முன்வந்தார். இதற்கான பணிகள் சில நாட்களாக, கோவிலில் நடந்து வந்தன. தஞ்சாவூரைச் சேர்ந்த ரகு குமார் தலைமையில், தேக்கு மரக் கதவு தயாரிக்கப்பட்டது. இக்கதவுகளில், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் மற்றும் தேவகுரு பிரகஸ்பதி உட்பட 11 உருவங்கள் செதுக்கப்பட்டன. தொடர்ந்து, அவற்றின் மீது ஒன்றரை கிலோ தங்கத்தாலான, தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. இக்கதவுகளில், 35 தங்க மணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. தங்கக் கதவுகள் தயாரிக்கப்பட்டு, அதை கோவிலுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம், கோவிலில் பெரிய பலிபீடத்திற்கு முன் நடந்தது. இதில், குருவாயூர் தேவஸ்வம் போர்டு தலைவர் சந்திரமோகனிடம், தங்கக் கதவுகளின் சாவியை, தொழிலதிபர் ரகுநாத் வழங்கினார். தொடர்ந்து, உச்சி கால பூஜைக்குப் பின், இதுவரை இருந்து வந்த கதவுகள் அகற்றப்பட்டு, தங்கக் கதவுகள் பொருத்தப்பட்டன.