பதிவு செய்த நாள்
31
அக்
2022
10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா பத்திரிகை, சிறப்பு பூஜையுடன், வினியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பூர்வாங்க பணி, கடந்த மாதம், 30ம் தேதி தொடங்கியது.
இதையடுத்து தொடர்ந்து தேர்கள் பழுது பார்த்தல், கோவில் வளாகம் துாய்மைப்படுத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தருதல் உள்ளிட்ட பணி நடந்து வருகிறது.
நவ.,27ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிச.,6ம் தேதி அதிகாலை கோவிலில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவுக்கு, 20 ஆயிரம் பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் பத்திரிகைக்கு, கோவில் குருக்கள் வேத மந்திரம் முழங்க நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கோவில் உதவி இணை ஆணையர் ராஜேந்திரனிடம், கோவில் குருக்கள் பத்திரிகை வழங்கி, வினியோகிக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.