பதிவு செய்த நாள்
31
அக்
2022
11:10
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சரவணப் பொய்கையில் தீர்த்தவாரியில், பகல் 12:00 மணிக்கு, கந்தப்பெருமான் எழுந்தருளி, நீராடினார். இதைத்தொடர்ந்து, படித்துறையில் காத்திருந்த பக்தர்களும், சரவணப்பொய்கையில் நீராடியும், புனித நீரை தலையில் தெளித்தும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதையடுத்து, நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் வெள்ளி குதிரை வாகனத்தில் தங்கவேல் கொண்டு போர்க்கோலத்தில் எழுந்தருளிய கந்தப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனை விரட்டிச் சென்று வதம் செய்தார். பின், தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து கண்டுகளித்து, அரோகரா கோஷம் எழுப்பினர். சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, இன்று மாலை 6:00 மணிக்கு கந்தப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
பெரும்பேர் கண்டிகை: அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகையில், சிவசுப்பிரமணியர் கோவில் அமைந்து உள்ளது. கந்த சஷ்டி விழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. ஆறாம் நாளான நேற்று, சிறப்பு பூஜைகளும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல், எல்லையம்மன் கோவில் அருகே, முருகப்பெருமான் சிங்க முகம், யானை முகம், ஆட்டு கிடா, அரக்க உருவில் உள்ள சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில், மாமர சித்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு, உற்சவருக்கு அபிஷேகமும், வேல், இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, 10:00 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், திரிசதி அர்ச்சனை தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு, சூரபத்மன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு, லலிதா பரமேஸ்வரி அம்மன் சன்னதியில், வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதை தொடர்ந்து, சூரசம்ஹார நிகழ்ச்சி ஆலயத்தின் எதிரில் நடைபெற்றது. முருகன் சூரனை ஆக்ரோஷமாக வதம் செய்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, அரோகரா கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்தில் மனம் உருகி வேண்டினர். அதே போன்று, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஊரப்பாக்கம், வண்டலுார் ஆகிய பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றன. அனைத்து முருகன் கோவில்களிலும், பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர்.