பதிவு செய்த நாள்
02
நவ
2022
01:11
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கணக்கு வழக்கு ஆய்வு, சித்சபை மீது பக்தர்கள் ஏற அரசாணை, தீட்சிதர்கள் மீது குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்குப் பதிவு, கைது படலம் என, அரசின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளின் பின்னணியில், கோவிலை கையகப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகும். இங்கு துாக்கிய திருவடியுடன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பூமியின் மையப்பகுதி என அமெரிக்க ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சிறப்புகளுக்குரிய சிதம்பரம் நடராஜர் கோவிலில் அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாகி விட்டது. தில்லைவாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இக்கோவிலை நிர்வகித்து வருகின்றனர். தமிழகத்தின் மிகத் தொன்மையான இக்கோவிலை ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, 1987ல் செயல் அலுவலரை அரசு நியமித்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீட்சிதர்கள் தடை பெற்றனர். நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்ட வழக்கு, 2006ல் தி.மு.க., ஆட்சியில் மீண்டும் துாசு தட்டப்பட்டது. கோவிலுக்கு செயல் அலுவலர் நியமித்தது செல்லும் என, 2009ல் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து, இணை ஆணையர் திருமகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தை ஹிந்து அறநிலையத்துறை ஏற்றது.
இதை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்ச் விசாரித்து, 2014 ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், கோவில் செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்தும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது; அவர்களே கோவிலை நிர்வகிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தது. அதையடுத்து, உண்டியல் தொகையை தீட்சிதர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேறியது.
சித்சபை பிரச்னை: இந்நிலையில், நடராஜர் கோவிலில் சித்சபையில் ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிரச்னை எழுந்தது. கொரோனா குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், சித்சபையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என பக்தர்கள் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் பொறுப்பேற்ற தி.மு.க., அரசும், இப்பிரச்னையில் கவனம் செலுத்தியது. ஐகோர்ட் உத்தரவுபடி, பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கி, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, தற்போது பக்தர்கள் கடந்த 4 மாதங்களாக சித்சபையில் அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்து, கோவிலை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக, அறநிலையத்துறை சார்பில் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டு, ஆதரவு, எதிர்ப்பு என, 4,000 பேர் கருத்து தெரிவித்தனர்.
கணக்கு வழக்குகள் ஆய்வு: அடுத்து, கோவிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய, அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் கோவிலுக்கு வந்த அவர்களிடம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கணக்குகளை காண்பிக்க தீட்சிதர்கள் மறுத்தனர். இப்பிரச்னை பூதாகரமாக, ஒரு வழியாக தீட்சிதர்கள் சம்மதித்தனர். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 22 முதல், 19 நாட்கள் சரிபார்ப்பு பணி முடிந்தது. தீட்சிதர்கள் ஒரு வழியாக மீண்டும் நிம்மதியடைந்த நிலையில், குழந்தை திருமண விவகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளதால், ஒட்டுமொத்த தீட்சிதர்களையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
கோவிலை கைப்பற்ற முயற்சி?: மூன்று தீட்சிதர்கள் குடும்பத்தினர் மீது போலீசார் இதுவரை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். புகார் தெரிவிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதும், சிறப்பு அதிரடி போலீசார் மூலம் தீட்சிதர்கள் கைது செய்யப்படுவதாலும், தீட்சிதர்கள் மிரட்சியில் உள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என்ற பீதியில் உள்ளனர். தமிழக அரசு, சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை நேரடியாக சட்டப்பூர்வமாக எடுக்க இயலாத காரணத்தால் கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து, கட்டாயப்படுத்தி கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி நடக்கிறதா என்ற அச்சம் தீட்சிதர்கள் மத்தியில் எழுந்துள்ளது.எனவே, தொன்று தொட்டு தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வரும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், பூஜை முறைகள் ஏதும் பாதிக்காமல், பழமையும், பாரம்பரியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. - நமது சிறப்பு நிருபர்-