பதிவு செய்த நாள்
02
நவ
2022
01:11
மயிலை கபாலீஸ்வரர், மேல்மலையனுார் அங்காளம்மன், இருக்கன்குடி மாரியம்மன், பொள்ளாச்சி மாசாணியம்மன், நாமக்கல் நரசிம்ம பெருமாள் கோயில்களில் நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறநிலைய அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில், நாள் முழுதும் அன்னதான திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றார். வடபழநி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் ஏற்கனவே இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்தபடி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அவருடன் சுற்றுலா துறை மற்றும் அறநிலையத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் , இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் உடனிருந்தனர். காணொளி காட்சி மூலம் திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்த பின்னர் இருக்கன்குடியில் மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி, ஒன்றிய குழு தலைவர் நிர்மலா, பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, கோயில் உதவி ஆணையர் கருணாகரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கினர். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் , புளியோதரை, எலுமிச்சை சாதம் , தயிர் சாதம், சுண்டல் என 5 வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் முதல் கோயிலாக நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.