பதிவு செய்த நாள்
07
நவ
2022
04:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி, நாளை கோவில் நடை அடைக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது கோவில்கள் நடை அடைக்கப்படும். இந்தாண்டு சூரிய கிரகணம் கடந்த, அக்., 25ம் தேதி நிகழ்ந்தது. அப்போது, சூரிய கிரகண நேரத்தில் கோவில்களின் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு, சந்திர கிரகணம் நாளை நிகழ்கிறது. இதனையெட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை, பகல், 2:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும், 9ம் தேதி காலை, 6:00 நடை திறக்கப்பட்டு, வழக்கம்போல, பூஜைகள் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி நாளை, பகல், 1:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு, மறுநாள் காலை, 6:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், சந்திர கிரகணத்தையொட்டி, நாளை (8ம் தேதி) பகல், 1:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, மாலையில், சுத்த புண்ய வாசனை முடிந்தபின், அன்று மாலை, 6:30 மணிக்கு மேல், கோவில் நடை திறக்கப்படும் என, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.