பதிவு செய்த நாள்
08
நவ
2022
10:11
ஈரோடு : மாநிலங்களுக்கு இடையேயான கோவில்களில் நல்லிணக்க உறவு மேம்பட வஸ்திர மரியாதை பண்ணாரி கோவிலில் இன்று அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கும்,இதர மாநில திருக்கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட வஸ்திர மரியாதை வழங்குவதற்கான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்.,10ம்தேதி பண்ணாரி கோவிலிலிருந்து கோவில் நிர்வாகத்தினர் கர்நாடக மாநிலம் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மாநில இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.அதைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று கர்நாடக மாநிலம் மைசூரு சாமூண்டீஸ்வரி கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ்,கர்நாடக மாநில அறநிலையத்துறை தாசில்தார் கிருஷ்ணா,மற்றும் பாலாஜிபிரசாத்,மற்றும் கோவில் பணியாளர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பண்ணாரி கோவில் சார்பாக ஈரோடு மண்டல இணைஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் மேனகா,மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி, மகேந்திரன், மற்றும் பணியாளர்கள், பூசாரிகள்,இணைந்து கோவில் வாசலில் இருந்து மேளதாளத்தோடு வரவேற்பு அளிக்கப்பட்டு ,சாமுண்டீஸ்வரி கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரத்தை பண்ணாரி அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின்பு கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த அதிகாரிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அவர்களை கௌரவப்படுத்தினர். இந்நிகழ்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் இருமாநிலங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகளுக்கும்,பொதுமக்களுக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.