பதிவு செய்த நாள்
11
நவ
2022
06:11
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர், ஈக்குமாறு வைத்து பூஜை செய்யப்படுவதால் தென்னை விவசாயம் மேம்படும் என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியர் கோவிலில்ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி, அதுதொடர்பான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்க சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ போட்டு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால், ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படும். அதன்படி கடந்த அக்., 6 முதல், வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முத்துார், மங்களப்பட்டி அடுத்த கருந்தேவி கவுண்டன்புதுாரை சேர்ந்த, பக்தர் குமாரசாமி கனவில் இளநீர், ஈக்குமாறு (துடைப்பம்) வைத்து பூஜை செய்யும் படி உத்தரவானது. அதன்படி, பூ போட்டு கேட்டபின், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் இளநீர், ஈக்குமாறு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், ‘சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இளநீர், ஈக்குமாறு வைக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் அதன் தாக்கம் போக போக தெரியவரும்’ என்றார். பக்தர்கள் கூறுகையில், ‘தென்னை உற்பத்தி அதிகரித்து கொப்பரை, தேங்காய் உள்ளிட்டவை விலை சரிந்து வருகிறது. சிவன்மலை உத்தரவு பெட்டியில் இளநீரும், ஈக்குமாறும் உத்தரவாகியுள்ளதால், தென்னை விவசாயம் மேம்பட்டு அதன் பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது’ என்றனர்.