திருச்செந்தூர் கோயிலுக்குள் அலைபேசி பயன்படுத்த தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2022 07:11
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குள் அலைபேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இக்கோயில் அர்ச்சகர் சீதாராமன் தாக்கல் செய்த பொது மனு:
கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு உள்ளிட்ட காரணத்தால் புகைப்படம் எடுக்க தடை உள்ளது. சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே அலைபேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவர்கள் உத்தரவு:
கோயிலுக்குள் அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவருடைய தனிப்பட்ட யூ டியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. கோயிலுக்கு வரும்போது அநாகரிகமான உடைகள் அணிந்து சுற்றுலாவுக்கு வருவது போல் மக்கள் வருவது வேதனை அளிக்கிறது. தமிழக கோயில்கள் என்ன சத்திரமா. கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். திருச்செந்துார் கோயிலுக்குள் அலைபேசி பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்ககூடாது. வாசலில் சோதனை மையம் அமைக்க வேண்டும். அலைபேசி டிடெக்டர் சோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை உடன் நிறைவேற்ற அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன் நகலை இணை கமிஷனர் நீதிமன்றத்தில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.