ஏழூர் முத்தாலம்மன் கோயில் திருவிழா : சப்பரத்தை சுமந்து வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2022 06:11
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோயில் சப்ரத் திருவிழா நடந்தது.
தேவன்குறிச்சி, டி.கல்லுப்பட்டி, சத்திரப்பட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி, காடனேரி, கிளாங்குளம் ஆகிய ஊர்கள் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐப்பசியில் முத்தாலம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். முத்தாலம்மனை தேவங்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னி வேலம்பட்டியில் மகாலட்சுமி, அம்மா பட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, சத்திரப்பட்டியில் சௌபாக்கியவாதியாக வழிபடுகின்றனர். அம்மாபட்டியில் ஏழு ஊர்களுக்கு அம்மன் உருவாக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு அவரவர் ஊர்களில் இருந்து தலைச்சுமையாக 6 சப்பரங்களை அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து முத்தாலம்மனை அவரவர் ஊருக்கு எடுத்துச் சென்று வழிபடுவது திருவிழாவில் சிறப்பம்சம். இந்த ஊர்களில் காப்பு கட்டி 15 நாள் விரதம் இருந்த இளைஞர்கள் 40 அடி உயரத்தில் சப்பரம் செய்து அதை தூக்கிக்கொண்டு பக்தர்கள் புடைசூழ அம்மாபட்டிக்கு நேற்று காலை வந்தனர். சுவாமி சிலைகளுக்கு, அந்தந்த ஊர் நாட்டாமைகள் அம்மனுக்கு முதல் மரியாதை வழங்கினர்.அதன்பின் ஆறு சப்பரங்களில் சிலைகளை வைத்து அவரவர் ஊருக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர். வேலைக்காக எங்கு சென்றிருந்தாலும் இத்திருவிழாவில் பங்கேற்க வந்து விடுவார்கள். ஜாதி பேதம் இன்றி அரசியல் பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையாக கொண்டாடினர். இலக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் மதுரை- ராஜபாளையம் போக்குவரத்து வேறு வழியில் மாற்றிவிடப்பட்டிருந்தது. டிஎஸ்பி இலக்கிய தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.