முருகப்பெருமானுக்கு மந்திர மயில், இந்திர மயில், அசுர மயில், ஒளக்ஷத மயில், மணி மயில், ஆன்ம மயில் என பலவகை மயில்கள் உண்டு. மந்திரங்களை முறையாக ஜெபித்து முருகனை வழிபட்டால் முருகப்பெருமான் பிரணவ சொரூபமான மயிலில் வந்து காட்சியளிப்பான். இந்தக் காட்சியை குக ரகசியம் என்றும், தகராலய ரகசியம் என்றும் கூறுவதுண்டு. பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் மயில்மீது பாலகனாக வந்து அருள்புரிந்தார். இவர் பாடிய ஸ்ரீமத் குமாரசுவாமியம் என்னும் நூலில் பகைகடிதல் பகுதியில், மயிலே! முருகப் பெருமானை இப்போதே அழைத்து வருக என்னும் பொருளில் கொணர்தி உன் இறைவனையே என்று பாடியுள்ளார். இந்நூலை பக்தியோடு படிப்பவர்கள் முருகன் அருளைப் பெற்று சிறப்புடன் வாழ்வர்.