பதிவு செய்த நாள்
26
நவ
2022
03:11
தமிழக கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிய ஓராண்டு பயிற்சி போதும் என்ற அறநிலையத்துறை அறிவிப்புக்கு, ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும், தி.மு.க., அரசின் கொள்கை முடிவால், அதன் ஒரு பகுதியாக, 5 ஆண்டு அர்ச்சகர் பயிற்சியை, ஓராண்டு நடத்தினால் போதும் என விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, அர்ச்சகர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்க, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகா கிளை தலைவர் சிவஸ்ரீ செல்லப்பா சிவராச்சியர்: ஒரே ஆண்டில், அர்ச்சகராக படித்து பூஜை செய்யலாம் என்பது, சாத்தியமே கிடையாது. இதற்கு, நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். வேதம் என்பது கடல். ஓராண்டில் கற்று அர்ச்சகர் ஆவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் பழைய விதிமுறைப்படி, அர்ச்சகருக்கான பயிற்சி, 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஸ்ரீ நாகமகா தீர்த்தர் சுவாமி அர்ச்சகர் பிரேமசந்திரன்: ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி என்பது, எல்.கே.ஜி., படிப்பை போன்றது. வேதபாட சாலை முறையில், 5, 7, 9 ஆண்டு அர்ச்சகர் படிப்பு உள்ளது. இந்த ஆண்டுகளில் படித்தால் மட்டுமே ஒருவர் அர்ச்சகர் ஆக முடியும். முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
தர்மபுரி பரமேஸ்வரன் கோவில் அர்ச்சகர் குருசந்த்சாஸ்திரி: ஹிந்து மதத்தில் கோவில் கும்பாபிஷேகம் தான் உயர்ந்தது. இதில், நான்கு வேதங்கள், 28 ஆகமங்கள், 64 வகை முத்திரைகள் மற்றும் தமிழில் தேவாரம், திருபுகழ் பாடப்பெற்று, கும்பாபிஷேகம் மிகப்பெரிய வைபோகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும். அர்ச்சகர் பயிற்சியை, ஐந்தாண்டில் இருந்து, ஓராண்டாக குறைக்க, விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேத மந்திரகள் மட்டுமல்ல, கோவில்களில் தமிழில் பிரதானமாக உள்ள தேவாரம், திருப்புகழை முழுமையாக கற்கவே, ஓராண்டு போதாது என்பது, அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கு தெரியும். தமிழக அரசு முடிவை திரும்ப பெற வேண்டும்.
தர்மபுரி, ஆதி லிங்கேஸ்வரர் கோவில் அர்ச்சகர் ஸ்ரீதரன் சாஸ்திரி: தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சியை, ஐந்தாண்டுகளில் இருந்து, ஓராண்டாக மாற்றம் கொண்டு வந்துள்ளதால், கோவில் மரபுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஆழ்வார்கள், நாயன்மார்களையும், தமிழ் மன்னர்களையும் பின்பற்றி, அறநிலையத்துறை விதிகளில் கொண்டு வந்துள்ள மாற்றத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்.