ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் மேற்கு பகுதியில் ரூ. 6 லட்சம் செலவில் பக்தர்கள் ஓய்வுக்கான தகர ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சித்திரை விழா விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் அதிகம் வந்து செல்வார். ஓங்கி உயர்ந்த பலவகை மரங்கள், வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பாக உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் சில மாதத்திற்கு முன் நடந்தது. பக்தர்கள் நன்கொடை மூலம் தற்போது கோயில் வளாகத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மலைப்பகுதியில் கோயிலின் மேற்கில் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக ரூ.6 லட்சம் மதிப்பில் தகர செட் அமைக்கும் பணி சமீபத்தில் முடிந்துள்ளது. கோயில் செயல் அலுவலர் நதியா, ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது: கோயில் வளாகத்தில் பக்தர்கள் நன்கொடை மூலம் படிகள் பராமரிப்பு, தளம் அமைத்தல், சிவன் சன்னதி பழுதுபார்த்தல், கோபுரம் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசுதல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தை மாதம் கும்பாபிஷேகம் நடத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.