அமெரிக்க விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒருநாள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆய்வுக்கூடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி, அவர் காதுக்கு வந்தது. இதைக்கேட்டவர் எவ்வித பதட்டமும் இல்லாமல், மனைவியுடன் அங்கு சென்றார். சாம்பல் குவியலாக காட்சியளித்த ஆய்வுக்கூடத்தை பார்த்ததும் மனைவி பதறிப்போனாள். ஆனால் எடிசனோ, ‘‘நடந்ததை பற்றிக் கவலைப்படாதே. இனி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்! வா...’’ என்று மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் மகனிடம், ‘‘ஆய்வுக்கூடத்தை புதிய தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்று நாம் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா? இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார். பின் புதிய ஆய்வுக்கூடத்திற்கான வரைபடத்தையும் காகிதத்தில் வரைய ஆரம்பித்தார். பார்த்தீர்களா... இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் நமது வாழ்விலும் ஏற்பட்டிருக்கும். ஆனால் சிலர் அதையே நினைத்து வருந்திக்கொண்டிருப்பர். இதனால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. எனவே கடந்த காலத்தை பற்றி நினைக்காமல், அடுத்து என்ன செய்வோம் என்று யோசியுங்கள். உங்களுக்கு வளமான வாழ்வும், நல்ல எதிர்காலமும் அமையும்.