டேனியல் என்னும் மாணவன் எதையும் திக்கித் திக்கி பேசும் இயல்பு கொண்டவனாக இருந்தான். சகமாணவர்கள் இவனைப் போல பேசி கேலி செய்தனர். நண்பர்களோ பரிதாபப்பட்டனர். இதனால் வகுப்பில் மனப்பாடப்பகுதியை ஒப்புவிக்க மிகவும் சிரமப்பட்டான். இதை உணர்ந்த ஆசிரியர் ஒருவர், ‘‘மனதில் தோன்றுவதை பேசாமல் இருக்கிறாய். ஒப்புக்கும்போது நீ தயக்கம் காட்டுவதால்தான் உன்னை கேலி செய்கிறார்கள். முதலில் உன் மீது நம்பிக்கை வை. சரி. இதற்கு தீர்வு என்ன தெரியுமா... பேச்சுதான். உனக்கு எப்போதெல்லாம் பேச வாய்ப்புக் கிடைக்கிறதோ, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்’’ என்று அறிவுறுத்தினார். அதன்படி செய்த டேனியல் தைரியமாக எல்லோரிடமும் பேச ஆரம்பித்தான். நாளடைவில் திக்கிப் பேசுவதும் மறைந்தது. பின்னாளில் பலரது கைதட்டல்களை வாங்கும் பேச்சாளராக ஒளிர்ந்தான். இதற்கு காரணம் தன்னம்பிக்கை. உங்களிடமும் தன்னம்பிக்கை இருந்தால் எட்டுத்திக்கும் உங்கள் பெயர் ஒலிக்கும்.