பதிவு செய்த நாள்
30
ஆக
2012
10:08
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாகத் துவங்கியது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில் கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. மாலை 6 மணிக்கு புறப்பட்ட கொடி பவனி இரவு 7.30 மணிக்கு தேவாலய முகப்பிற்கு வந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தேவாலயத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. திருத்தேர் பவனி செப்.,7ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. முன்னதாக மாலை 5.15 மணிக்கு, போப்பின் இந்திய தூதர் சால்வத்தோரே பென்னாக்கியோ, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் ஆகியோர் தலைமையில் தேவாலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. 8ம் தேதி மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் தேவாலய மேல், கீழ் கோவில்களில் நாள்தோறும் பல்வேறு மொழிகளில் திருப்பலி நடக்கும். கோவில் கலையரங்கத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், நவநாள் செபம் நடக்கும்.
பக்தர்களிடம் பகல் கொள்ளை: வேளாங்கண்ணியில், அதிக கட்டணம் வசூலிக்கும், தனியார் விடுதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற கலெக்டரின் உத்தரவை, செயல்படுத்தாமல், பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவிலில், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள், வந்து செல்வது வழக்கம். வேளாங்கண்ணியில் பக்தர்கள் தங்குவதற்காக, 250க்கும் மேற்பட்ட, தனியார் விடுதிகள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. பக்தர்கள் தங்கும் விடுதிகளில், அறைகள் கிடைப்பதில் ஏக கிராக்கி உள்ளது. மும்பை, கோவா மற்றும் வடமாநில பகுதிகளில் இருந்து வரும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் நிர்வாக விடுதி, தனியார் விடுதி அறைகளை, பல மாதங்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து விடுகின்றனர்.இதை சாதகமாக்கி இடைத்தரகர்கள், கோவில் ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்களுடன் கூட்டணி அமைத்து, வேளாங்கண்ணியில் செயற்கையாக அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டதை போல், தோற்றத்தை உருவாக்கி, பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை பிடுங்குகின்றனர். வசதியற்ற பக்தர்கள், தங்கும் வசதியின்றி, திறந்த வெளியில் குழந்தைகளுடன் படுத்துறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தி, சிரமத்துடன் திரும்பி செல்கின்றனர். நாகை கலெக்டர் முனுசாமியின் கவனத்திற்கு பிரச்னை கொண்டு செல்லப்பட்டதையடுத்து, திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், கலெக்டர் உத்தரவு கண்டு கொள்ளாமல் விடப்பட்டதால், இரண்டு படுக்கைகள் கொண்ட அறை, 2,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்து, இடைத்தரகர்கள் பணம் பறிக்கின்றனர். அதேபோல், வேளாங்கண்ணி நகரில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு கலெக்டர் விதித்த தடையும், கண்டுகொள்ளப்படவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் தங்கு தடையின்றி பயன்படுத்தப்படுகிறது. வேளாங்கண்ணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டபோது, ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளும், உடைந்த மது பாட்டில்களும் கிடந்தன. சுகாதாரமாக இருக்க கலெக்டர் உத்தரவிட்டாலும், அதை செயல்படுத்த வேண்டிய பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள், அலட்சியம் காட்டுவதால், வேளாங்கண்ணியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.