ஜோதி வடிவாய் திருப்பரங்குன்றம் : மலைமேல் மகா தீபம் பக்தர்கள் பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2022 07:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இன்று காலை கார்த்திகை தேரோட்டமும் மாலையில் மலைமேல் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். நாளை தீர்த்த உற்சவம் நடக்கிறது. தேரோட்டம்: 16 கால் மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் தேரோட்டம் நடந்தது.
கார்த்திகை மஹா தீபம்: தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தாமிர கொப்பரைக்கு காலை பூஜை முடிந்து மலை மேல் கொண்டு செல்லப்பட்டது. கோயிலுக்குள் அனுக்கை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. அதே நேரத்தில் மலை மேல் தீப மண்டபம் அருகில் உள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து விநாயகர் பூஜை, அக்னி லிங்க பூஜை, வர்ண பூஜை, தீபாராதனைகள் முடிந்து தீப கொப்பரையில் புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பால தீபம் ஏற்றப்பட்டது. கோயில் மணி அடிக்கப்பட்டதும் மலை மேல் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது. கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்பு மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது. இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி 16 கால் மண்டபம்முன்பு எழுந்தருளினார். அங்கு சொக்கப்பனை தீப காட்சி முடிந்து சுவாமி ரத வீதிகளில் உலா நிகழ்ச்சியில் அருள் பாலித்தார்.